Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முடிவு செய்யும்போது, சித்திரைத் திருவிழா நாட்களை தவிர்த்துவிட வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். சித்திரைத் திருவிழா காலத்தில் தேர்தல் வந்தால், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குதல் ஆகிய வைபவங்களின்போது வாக்குப்பதிவு நாள் வராமல் பார்த்துக்கொள்ளப்படும்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சரியான தகவலைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக மதுரையில் ஏப்ரல்18-ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. அன்றைய தினம் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாளான 17-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், பிந்தைய நாளான 19-ம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரும் மக்களால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, வாக்குப் பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்க மறுத்த மாவட்ட நிர்வாகம், வாக்குப்பதிவு அதே நாளில்தான் நடைபெறும். வாக்காளர்கள் வசதிக்காக வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் என அறிவித்தது. எனினும், அதனால் பயன் ஏதும் ஏற்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் 65.83 சதவீத வாக்குகள் தான் பதிவானது. வாக்குப்பதிவில் சுமார் 2 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் சித்திரைத் திருவிழா காலக்கட்டத்தில்தான் வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து, திருக்கல்யாணம், தேரோட்டம், வைகையில் கள்ளழகர் எழந்தருளும் வைபவம் நிகழும் நாட்கள் தவிர்த்து வேறு நாளில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்.நரேந்திரன் கூறுகையில், "வழக்கமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழா நாட்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர்தான் வாக்குப் பதிவு தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். கடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படாததால் மதுரையில் வாக்குப்பதிவில் சரிவு ஏற்பட்டது.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 25-ம் தேதியும், கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் ஏப்.26-ம் தேதியும் வருகிறது. அதனால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தாமல் வேறொரு தேதியில் தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்குப்பதிவு தேதி தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்களிடம் கருத்துக்கேட்கும்போது கட்டாயம் சித்திரைத் திருவிழா நாட்கள் குறித்து தெரிவிப்போம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT