Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று முற்றுகை, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினர் 588 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானம் இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாத காலத்துக்கு வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியை ரூ.700 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நேற்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற சிஐடியுவினர், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் தலைமையில் போராட் டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன் உள் ளிட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர். இதேபோல, பள்ளபட்டி கனரா வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 33 பெண்கள் உள்ளிட்ட 42 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஏ.தர் உட்பட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி தலைமையில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 82 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற சாலை மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ முன்னிலை வகித் தார். முன்னதாக, ஆற்றுப் பாலத்தில் இருந்து ரயிலடி நோக்கி ஊர்வலமாகச் சென்றபோது போலீஸார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 117 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியலில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டப் பொருளாளர் பாண்டியன் தலைமை யில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மன்னார்குடி, குட வாசல், திருவாரூர், பேரளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT