Published : 06 Jan 2021 03:15 AM
Last Updated : 06 Jan 2021 03:15 AM
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற் றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் காலத்தை (ஆடி முதல் மார்கழி வரை) தட்சிணாயண புண்ணிய காலம் எனவும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் காலத்தை(தை முதல் ஆனி வரை) உத்ராயண புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது.
இதையொட்டி, சிவாலயங் களில் உற்சவம் நடைபெறும். அதன்படி, தி.மலை அண்ணா மலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில், மங்கள இசை ஒலிக்க மற்றும் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்துக்கு, மாட வீதியில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்ற ஆருத்ரா விழாவையொட்டி, மாட வீதியில் சுவாமி உற்சவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சி யாக, உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஊடல் கூடல் விழா வரும் 15 மற்றும் 16-ம் தேதியில் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT