Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

இலங்கையில் கடும் தட்டுப்பாடு, விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சள்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகள். (அடுத்த படம்) மஞ்சள் கடத்தல் விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு.

தூத்துக்குடி

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள்கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 20 டன் கடத்தல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் அன்றாட சமையலில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இலங்கையின் ஓராண்டு மஞ்சள் தேவை 7 ஆயிரம்டன் ஆகும். ஆனால், அங்கு 2 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்திசெய்யப்படுவதால், மீதி 5 ஆயிரம்டன் மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதித்தது. அவற்றில் மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களும் அடக்கம். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் என இலங்கை அரசு கூறியிருந்தது.

விலை உயர்வு

இருப்பினும் உள்நாட்டு உற்பத்தி இலங்கையில் தேவையான அளவில் இல்லாததால் மஞ்சள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி தடைக்கு முன்னர் ஒரு கிலோ மஞ்சள் 427 இலங்கை ரூபாயாக (இந்திய மதிப்பில் ரூ.167) இருந்தது. ஆனால், தற்போது 4000 முதல் 5000 இலங்கைரூபாயாக (இந்திய மதிப்பில் ரூ.1600 முதல் ரூ.2000 வரை) உயர்ந்துள்ளது.

கடத்தல் அதிகரிப்பு

இதன் காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக படகுகள் மூலம் மஞ்சள் அதிகளவில் இலங்கைக்கு கடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் சுமார் 20 டன் கடத்தல் மஞ்சளை காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோக்கள், மினிலாரி, நாட்டுப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2,000 கிலோ பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸார் நேற்று முன்தினம் கைப்பற்றினர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x