Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM
காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 64 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கள்ள நோட்டு வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு 37 ஆண்டு சிறைத் தண்டனை நீதிமன்றம் முலம் வாங்கித் தரப்பட்டுள்ளது என்றும் காவல்துறை மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் கடந்த ஆண்டு 174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 140 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.3.78 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடு போனதாக செய்யப்பட்ட வழக்குப் பதிவில் ரூ.3.06 கோடிமதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 645 குற்றவாளிகள்மீது நன்னடத்தைப் பத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக 50 ரவுடிகள், போதைப் பொருள் விற்பனை செய்ததாக 7 பேர், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக 7 பேர் உட்பட மொத்தம் 64 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டு வழக்கு ஒன்றில் குற்றவாளி ஒருவருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தரப்பட்டு உள்ளது.
மதுவிலக்கு தொடர்பாக1,894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 1,971 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்மூலம் 4 சக்கர வாகனங்கள் 16, 3 சக்கர வாகனங்கள் 4, இரு சக்கரவாகனங்கள் 48 ஆகியவை உட்பட மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாலைவிதிகளை மீறியதாக ரு.4.60 கோடிஅபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டியதாக 495 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மொத்தம் 17,113வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டன. காணாமல் போன 327 பேரில் 277 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT