Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயில்கள், தேவாலயங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

புத்தாண்டை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருவள்ளூர்/திருப்போரூர்/காஞ்சி

புத்தாண்டை ஒட்டி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

உலகம் முழுவதும் நேற்றுகரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் புனிதபிரான்சிஸ் சவேரியார் தேவாலயம்,ஆவடி புனித அந்தோணியார் தேவாலயம், திருத்தணி புனித தணிக்கை மாதா தேவாலயம், பழவேற்காடு புனித மகிமை மாதா தேவாலயம், கும்மிடிப்பூண்டி செயின்ட் பால் தேவாலயம், ஆரம்பாக்கம் வானதூதர்கள் தேவாலயம் உள்ளிட்டதேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பெரும்பாலான தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், சிறுவாபுரி, ஆண்டார்குப்பம், பெரும்பேடு ஆகிய இடங்களில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயில், தேவதானம் ரங்கநாத பெருமாள் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயில்களில், புத்தாண்டை ஒட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருப்புகழ் திருப்படித் திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை முதலே சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டபத்தில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அர்ச்சனை உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டதால் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி நேற்றுகாமாட்சி அம்மன் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முதியோர் மற்றும் குழந்தைகளை சில கோயில்களில் அனுமதிக்கவில்லை. இதேபோல் உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x