Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் நடை பெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி: புதுக்கோட்டை யில் நிரந்தர நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு உடனே அனைத்து வகையான வங்கிக் கிளைகளிலும் கடன் வழங்க ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும். வனப் பகுதியில் இருந்து நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல விடாமல் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கிகளை உடனே அகற்ற வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பொன்னுசாமி: நெல் அறுவடைப் பணி நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
காணொலி வாயிலாக விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துவதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதோடு, அலுவலர்களிடம் முறையாக கோரிக்கையை தெரிவிக்க முடியவில்லை. எனவே, ஜனவரி மாதத்தில் நடைபெறும் குறைதீர்க் கூட்டத்தை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை, நெற் பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
நக்கீரர் தென்னை உற்பத்தி யாளர் நிறுவனத் தலைவர் காமராஜ்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேங்காயில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனே திறக்கப்படும். பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சாகுபடி பணி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக தேவையான அளவுக்கு விதைகள், இடுபொருட்கள் இருப்பு வைக் கப்பட்டுள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT