Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM
திருப்பூர் மாநகர் நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குமாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் ஜாயிண்ட் 1, ஜாயிண்ட் 2, தொட்டிபாளையம் சார் பதிவாளர்அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன. மேற்கண்ட அலுவலகங் களில் பத்திரப் பதிவுக்கு இணையதளம் மூலமாக பணம் செலுத்தி ரசீது பதிவு செய்யப்பட்டதில், அதிக அளவில் பணம் மோசடி செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. அதன்பேரில், மண்டல பத்திரப் பதிவுத் துறை தலைவர் ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டார். அதில், கணினியில் ஏற்கெனவே பதிவாகியுள்ள ரசீதை அழித்து, மீண்டும் புதிதாக ரசீது வழங்கியதுபோல காட்டி பணம் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு,இணைப் பதிவாளர்கள் விஜயசாந்தி, முத்துக்கண்ணன், உதவியாளர்கள் பன்னீர் செல்வம், சங்கர், இளநிலை உதவியாளர் மோனிஷா உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை துறை ரீதியில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, இரண்டு தினங்களுக்கு முன் பத்திரப் பதிவுத் துறைசார்பில் விரிவான விசாரணை நடத்தி, பண மோசடியில் ஈடுபட் டுள்ளவர்கள், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு, காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனடிப்படையில், உதவி ஆணையர் கே.பாலமுருகன் தலைமையிலான மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையில், சம்பவங்கள் நிகழ்ந்த தேதியில் மேற்கொள்ளப்பட்ட பத்திரப் பதிவுகள், சொத்துகளை விற்றவர்கள், வாங்கியவர் களின் தகவல்களை சேகரித்துள்ளமத்திய குற்றப் பிரிவினர், சந்தேகத் துக்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய சொத்து பரிமாற்றங்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "பத்திரப்பதிவுத் துறையிடமிருந்து பெறப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடைபெறுகிறது. இவ்விவகாரத்தில் ஓரிரு தினங்களில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. அதன்பிறகே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT