Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM
திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மரகத நடராஜருக்கு சந்தனப்படி களையும் அபிஷேகம் இன்று தொடங்குகிறது.
ராமநாதபுரம் அருகேயுள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ஆலயத்தில் மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு பெற்றது. மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பாதுகாக்கப்படுகிறது. இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் நடப்பது சிறப்பானது. ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் நடராஜர் சந்தனக் காப்பு இன்றி காட்சி தருவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் இன்று காலை 8 மணிக்கு நடக்கிறது. காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகமும் தொடங்கும். நாளை (டிச.30) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசக சுவாமி களுக்கு காட்சி கொடுத்து பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளி ரிஷப சேவையும் நடைபெறும். இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையால் வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. உள்ளூர் பக்தர்கள் பூஜைத் தட்டுகள், நைவேத்தியம் கொண்டு வந்து சுவாமிக்கு பூஜை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் குறித்து மரகத நடராஜர் சன்னதி மற்றும் விழா நடக்கும் இடங்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டார்.
மாவட்ட எஸ்பி இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம். பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா, வட்டாட்சியர் வீரராஜ், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT