Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக பெரியார் உருவப்படத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். மூத்த பெரியார் சிந்தனையாளர் அரிய முத்து தலைமை வகித்தார். மாநாடு ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சூர்யா சேவியர் அறிமுக உரையாற்றினார். அண்ணாவின் உருவப்படத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ.பத்மநாபன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். ஆரோக்கிய எட்வின், வழக்கறிஞர் பிரபாகர், ஜோசப் செல்வராஜ் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காணொலி காட்சி மூலம் பேசும்போது, “சமூகநீதிதான் பெரியாரின் முதல் குறிக்கோள். இதற்காகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது.
எல்லாமே எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. அதுவே பெரியாரின் நோக்கமாக இருந்தது. சமூக நீதி மீது கை வைப்பவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. சமூக நீதியை காக்க மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர மதிமுக செயலாளர் கேஎம்ஏ நிஜாம், தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி கரிசல் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புறக்கணிக்க வேண்டும்
காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.அவர் பேசும்போது,
“சமூக நீதியை பாஜக குழிதோண்டி புதைக்கிறது. அதற்கு அதிமுகவும் துணைபோகிறது. திமுக ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அனைத்து சமூகத்தினருக்கும் திமுக ஆட்சி காலங்களில் சமூகநீதி கிடைத்தது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக நீதிக்காக திமுக போராடி வருகிறது.
சமூக நீதிக்கு எதிரான கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT