Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

தி.மலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியவர் கருணாநிதி என திமுக முன் னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித் துள்ளார்.

அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் கிராம மக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி தி.மலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத் தில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “எம்ஜிஆர் ஆட்சியில் விவசாய பயன்பாட்டுக்கு மின்சார கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு 13 பைசாவில் இருந்து 14 பைசாவாக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். ஒரு பைசாவை குறைக்க வலியுறுத்தினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 17 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர், கடந்த 1989-ல் பொறுப்பேற்ற முதல்வர் கருணாநிதியிடம், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அப்போது அவர், ஒரு பைசா கூட மின் கட்டணம் கட்டத் தேவையில்லை, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் கூட்டுறவு கடன் நெருக்கடியால் டெல்டா விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். வாங்கிய கடன் தவனையை கட்ட தவறிய விவசாயிகளுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வாட்டி வதைத்தது அதிமுக அரசு.

கடந்த 2006-ல் முதல்வராகபொறுப்பேற்ற கருணாநிதி, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரூ.7 கோடியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல், கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமியிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு பகல் வேஷம் போடும் முதல்வர், கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x