Published : 25 Dec 2020 03:17 AM
Last Updated : 25 Dec 2020 03:17 AM
துபையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தில் வந்த பயணிகள், அவர்கள் கொண்டு வந்த உடமைகளை தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால், தங்கம் எதுவும் பிடிபடவில்லை.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் தங்கக் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கைமாறப் போவதாக தகவல் கிடைத்ததால், விமான நிலையத்தின் வெளிப்புற பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத்(50) முக்கிய பிரமுகர்கள் வரும் கார்கோ பகுதி வழியாக வந்து, வெளியில் காத்திருந்த தங்கக் கடத்தல் கும்பலிடம் தங்கக் கட்டிகளை அளித்தார். உடனடியாக அவர்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்து, அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கோபிநாத்திடம் நடத்திய விசாரணையில், தங்கக் கடத்தலில் துபை பயணி ஒருவர் மற்றும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து, கோபிநாத் உட்பட 5 பேரையும் கைது செய்து, திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2-ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT