Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தில் 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டிச.14, 15, 16 ஆகிய 3 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்த ஏற்கெனவே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் என்.வி.கண்ணன், பா.பாலசுந்தரம், பி.செந்தில்குமார், வீரமோகன், காளியப்பன், அயனாவரம் சி.முருகேசன், கோ.திருநாவுக்கரசு, சு.பழநிராஜன், ஆர்.அருணாசலம், டி.கண்ணையன், பி.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நாகை அவுரித்திடலில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, 2-வது நாளான நேற்று ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட், மதிமுக. விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்றனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமையிலும், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன் திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் தலைமையிலும் திரளானோர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 48 பேரை போலீஸார் கைது செய்து, பின் மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x