Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
சேவை அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16-ம் ஆண்டு விழா, 8 மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. டெல்டா மண்ட லத்தில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சேவை, தொண்டு அமைப்புகளின் மண்டல மாநாடு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர் பிரபாகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் மத் சுவாமி விமூர்த்தானந்தர், தொண்டு நிறுவனங்களுக்கு நினைவு பரிசளித்து ஆசியுரை வழங்கினார். சேவை அமைப்புகள் சார்பில் 9 பேருக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான கிரைண்டர்கள், அயர்ன் பாக்ஸ்கள், 3 சக்கர தள்ளு வண்டிகளை வழங்கிய ஆட்சியர் ம.கோவிந்தராவ், சேவை அமைப்புகளின் பணியைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ராமகிருஷ்ண மடம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சேவைப் பணிகளில் ஈடுபட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு பகுதியி லும் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அவசியமான பணிகளில் அரசுடன் தன்னார்வ அமைப்பினர் இணைந்து பணியாற்றுவது நல்ல பலனைத் தரும் என்றார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை நிர்மலாதேவி, திருச்சி கலையரசி, புதுக்கோட்டை கார்த்திகேயன், திருவாரூர் ஜெகதீசன், மயிலாடுதுறை முருகன், சென்னை மணி, நவீன், விஜயன் உட்பட 85 தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக, நாகை மாவட்ட அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT