Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாமையொட்டி, பல்வேறு பகுதிகளில் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்பார்வையாளர் கள ஆய்வு மேற் கொண்டார்.

கடந்த 16-ம் தேதி திருப்பூர்மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள 2,493 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 1043 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாகபெயர் சேர்த்தல், திருத்தம்செய்ய விரும்புவோருக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், மாவட்டவாக்காளர் பட்டியல் திருத்தபணிகள் மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

முகாமில் பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின்பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின் படி கள விசாரணை மேற்கொண்டு, உரிய காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முன்னதாக, பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சித்தம்பலம், அனுப்பட்டி, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார், கோட்டாட்சியர் ஜெகநாதன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், உள்ளிட்டவற்றுக்காக திருப்பூர்மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 29,502 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x