Published : 13 Dec 2020 03:17 AM
Last Updated : 13 Dec 2020 03:17 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் லோக் அதாலத் மூலம் 597 வழக்குகளுக்கு தீர்வு

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தேசியமக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களால் 15 அமர்வுகளாக லோக் அதாலத்நடத்தப்பட்டது. திருநெல்வேலியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ. நசீர் அகமது தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதிகள் விஜயகாந்த், இந்திராணி, குமரேசன், பத்மா, கிறிஸ்டல் பபிதா, பிஸ்மிதா, கெங்கராஜ், சுப்பையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வஷீத்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2003 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 458 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12.25 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சி.குமார் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டியில் 2 , திருச்செந்தூரில் 2, விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் வைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு என, மாவட்டத்தில் மொத்தம் 12 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும்மாவட்ட நீதிபதி எஸ்.உமா மகேஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜே.ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் ஆர்.எச். உமாதேவி, கே.சக்திவேல், ராஜ குமரேசன் கலந்துகொண்டனர். இதில் 997 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 139 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.2,70,50,894 வழங்கஉத்தரவிடப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 மாஜிஸ்திரேட் சுப்பிரமணியன், விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் பர்வதராஜ் ஆறுமுகம், அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 301 வழக்குகள்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 23 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், வனவழக்கு நீதிமன்ற நீதிபதி ஆஷாகவுசல்யா சாந்தினி, குற்றவியல் நீதிபதி சிவக்குமார் மற்றும்வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 1,143 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, அவற்றில், 143 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. இழப்பீடு தொகையாக உரியவர்களுக்கு ரூ.3,62,41,719 வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x