Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தின்படி, இந்தாண்டு மொத்தம் 313 எம்.பி.பி.எஸ் இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
குன்னூர் ஆனைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ரம்யா மற்றும் உதகை நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த மாணவர் பி.சின்னதுரை ஆகியோர் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர் பி.சின்னதுரை கூறும்போது, “நான் நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். எனது அண்ணன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். எனது அக்காவுக்கு திருமணம் ஆகிவிட்டது. நாங்கள் மூவரும் அரசுப் பள்ளியில்தான் பயின்றோம். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதால், எனது டாக்டர் கனவு நிறைவேறியது. நீட் தேர்வில் 267 மதிப்பெண் பெற்றேன்” என்றார்.
கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி ரம்யா கூறும்போது, “மாவட்டத்தின் கடைக்கோடி மலை கிராமமான ஆனைப்பள்ளம் எனது சொந்த ஊர். வெள்ளியங்காட்டில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, பூமாதேவி நகர் அரசுப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றேன். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற்றேன். எனது இரு தங்கைகள் 11 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். எனது பெற்றோர் ஆடு, மாடு மேய்த்தும், கூலி வேலை செய்தும் எங்களை வளர்த்தனர். எனக்கு சிறுவயதுமுதலே டாக்டர் ஆக வேண்டுமென்ற கனவு இருந்து வந்தது. நீட் தேர்வில் 145 மதிப்பெண் எடுத்தேன்.
மருத்துவக் கலந்தாய்வில் பழங்குடியினர் பிரிவில் எனக்குகோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது” என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரிக்கு கடந்த ஜூலை மாதம்தமிழக முதல்வர் காணொலி காட்சிவாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.447 கோடி மதிப்பில் இக்கல்லூரியின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT