திருவள்ளூர் அருகே சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published on

ஆந்திர மாநில வனப்பகுதிகளில் இருந்து, செம்மரக்கட்டைகளை தமிழகப் பகுதிக்கு கடத்தி வந்து, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்புவது தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சமீபத்தில் சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த 10 நாட்களாக திருவள்ளூர் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சோதனையில், நேற்றுதிருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் 10 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அங்கிருந்து அவைவெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும், வனத் துறையினரின் தீவிர விசாரணையில், செங்குன்றத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவர், சமீபகாலமாக கிடங்கை வாடகைக்கு எடுத்திருந்ததும், அவர் மீது செம்மரக் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

ஆகவே, ஒரு கோடி ரூபாய்மதிப்பிலான அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த சென்னை வனத் துறையினர், அவற்றை திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் வனத்துறையினர், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கை நடத்தி வந்த கதிரவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in