Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக சில இடங்களில் கடைகள் அடைப்பு பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆவடியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. அதற்கு பல்வேறு கட்சிகள்ஆதரவு தெரிவித்திருந்தன.

காஞ்சியில் பல்வேறு கடைகள் திறந்திருந்தாலும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காந்தி வீதியில் திரண்டு நின்றிருந்ததால் இப்பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

காந்தி வீதியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் உத்திரமேரூர், பெரும்புதூர் இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும்மேற்பட்டோர் கைதாகினர்.

செங்கை மாவட்டத்தில் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 350-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் திருப்போரூரில் மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். திருக்கழுக்குன்றத்தில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருப்போரூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம் பகுதிகளில் கடைகள் திறந்தி ருந்தன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பல கடைகள் மூடப்பட்டிருந்தன. திருநின்றவூர், செங்குன்றம், தாமரைப்பாக்கம், தண்டலம், ஆரணி, அம்மையார்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரிலும், சோழவரம் அருகே காரனோடையிலும் மறியல் நடைபெற்றது. இதில்500-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இதேபோல் ஆவடி, திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x