Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM
பல லட்சம் மதிப்புள்ள சொத்தை எழுதி வாங்கிய மகன் தங்களை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் பெற்றோர் நேற்று புகார் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் வந்தனாகர்க், துணை ஆட்சியர் அப்துல்முனீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 375 பொது நலமனுக் களை ஆட்சியர் சிவன் அருள் பெற் றார். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (63), அவரது மனைவி ராஜம்மா(57) ஆகியோர் அளித்த மனுவில்,‘‘எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில், சரவணன் (22) என்பவருடன் நாங்கள் வசித்து வந்தோம். இந்நிலையில், பல லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் நிலத்தை சரவணன் தன் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு, எங்களை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். உடல்நலம் பாதித்த எங்களால் வேறு இடம் செல்ல வழியில்லாமல் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளோம்.
எனவே, எங்களை ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்’’ என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்காக பல்வேறு தெருக்களில் தோண்டப் பட்ட சாலைகள் சரியாக மூடப் படாமல் உள்ளது. குறிப்பாக, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் சாலையில் குண்டும், குழியுமாக சாலை உள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி யுள்ளோம். எனவே, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த பூங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘பூங்குளம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், பூங்குளம் கிராமம், ராஜவீதி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் ‘டவர்’ அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டவர் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT