Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் தேக்கிகளை அகற்ற வேண்டும் என அரிமளம் பசுமை மீட்புக் குழுவினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிமளம் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வனத்தோட்டக் கழகத்தின் மூலம் யூக்கலிப்டஸ் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மரங்களின் ஒவ்வொரு வரிசைக்கும் இடையே மழை நீரை தேக்குவதற்காக சுமார் 3 அடி ஆழத்தில் டிராக்டர் மூலம் வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு, வனத்தை சுற்றிலும் சுமார் 3 அடி உயரத்துக்கும் மேல் வரப்பு அமைக்கப்பட்டுள்ளதால் வனப்பகுதியில் இருந்து ஏரி, கண்மாய்களுக்கு மழைநீர் வருவது தடுக்கப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே, இத்தகைய மழைநீர் தேக்கிகளை அகற்ற வேண்டும் என மாவட்ட வனத் துறை அலுவலர் களுக்கு அரிமளம் பசுமை மீட்புக் குழுவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் மேலும் கூறியபோது, “யூக்கலிப்டஸ் மரங்களை பாதுகாப்பதற்காக வனப்பகுதியில் மழைநீர் தேக்கிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இதனால், கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தபோதிலும்கூட 20-க்கும் மேற்பட்ட குளம், கண்மாய்கள் முழுமையாக நிரம்பவில்லை.
இந்த மழைநீர் தேக்கிகளை அகற்ற வேண்டும் என கடந்த 2017-ல் ஆட்சியராக இருந்த சு.கணேஷ் உத்தரவிட்டும் வனத் துறையினர் கண்டுகொள்ளவில்லை. தண்ணீரில்லாமல் திருவிழாவின் போது பொற்குடையான் குளத்தில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடத்தப்படுவதே இல்லை. எனவே, மழைநீர் தேக்கிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து வனத்தோட்டக் கழகத்தினர் கூறியபோது, “நீர் நிலைகளுக்கு செல்லக்கூடிய மழை நீரை முழுமையாக மறிக்கும் அளவுக்கு வனப்பகுதியில் தடுப் புகள் அமைக்கவில்லை. அவ் வாறு இருந்தால் ஆய்வு செய்து அகற்றப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT