Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியது பாம்பாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கப் பகுதியில் படகு இல்லம் அமைய உள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப் பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்டோர். அடுத்த படம்: ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் நேற்று முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டி யப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் நேற்று முழுமையாக நிரம்பியது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரே நீர்த்தேக்க அணையாக ஆண்டியப் பனூர் ஓடை நீர்த்தேக்க அணை உள் ளது. ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பெரிய ஆறு மற்றும் கொட்டாறு ஆகிய இரண்டு ஆறுகளையும் இணைத்து ஆண்டியப்பனூர் கிராமத்துக்கு அருகே இந்த அணை கட்டப்பட்டுள் ளது. அணை கட்டுமானப் பணிகள் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2007-ம் ஆண்டு முடிக்கப் பட்டது. அணையில் இருந்து வெளியேறும் நீர் குரிசிலாப் பட்டு அணைக்கட்டில் இருந்து பாம்பாற்றில் இணைந்து, பிறகு பெண்ணையாற்றில் கலக்கிறது.

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த் தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கனஅடி கொள் ளளவு நீரை தேக்கி வைக்க முடியும். நீர்த்தேக்கத்தின் நீர் வடிநில பகுதி 20.39 சதுர மைல் பரப்பளவு முழுவ தும் ஜவ்வாதுமலை சரிவுகளில் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பரப்பு 216.5 ஏக்கராகும்.

இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குரிசிலாப் பட்டு அணைக்கட்டு வழியாக ரீட் சாஹிப் வரத்துக் கால்வாய் வழியாக 9 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, 2 ஆயிரத்து 55 ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய்கள் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புன்செய் நிலமும், ஏரிகளின் மூலமாக 2 ஆயிரத்து 55 ஏக்கர் நன்செய் நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

14 கிராமங்களுக்கு பயன்

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த் தேக்கத்தால் ஆண்டியப்பனூர் இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, சின்ன சமுத்திரம், வடுக முத்தம் பட்டி, கூடப்பட்டு, மாடப்பள்ளி, கனமத்தூர், திருப்பத்தூர், செலந் தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளி குப்பம், ராச்சமங்கலம், பசலி குட்டை உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீராதாரமும் உயரும்.

ஜவ்வாது மலைத்தொடரில் ‘நிவர்’ புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர் மழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. கடந்த சில நாட்களாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஆண்டியப் பனூர் ஓடை நீர்த்தேக்கம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறத் தொடங்கியது. அணைக்கான நீர்வரத்து 8.42 கன அடியாக இருந்த நிலையில் வரத்து நீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அணை பகுதியில் நேற்று காலை நிலவரப் படி 19 மி.மீ மழை பதிவானது. அணையில் இருந்து நீர் வெளியேறு வது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, உபரிநீர் அதிகம் வெளியேற வாய்ப்புள்ளதால் பாம் பாற்றின் கரையோர மக்கள் தங் களது கால்நடைகளுடன் பாதுகாப் பான இடங்களுக்குச் செல்லு மாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

அமைச்சர் பார்வை

இந்த தகவலறிந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சண்முகம் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மேலும், அணைப் பகுதியில் அமைச்சர் உள் ளிட்ட அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் மலர் தூவினர். பின்னர், ஆண்டி யப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்தில் படகு இல்லம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x