Published : 06 Dec 2020 03:18 AM
Last Updated : 06 Dec 2020 03:18 AM

பூர்வஜென்ம புண்ணியங்களே வெற்றிகளுக்கு காரணம் நாராயணி பீடம்  சக்தி அம்மா அருளுரை

வேலூர் அடுத்த புரம் நாராயணி பீடம் சார்பில் ‘வித்யா நேத்ரம்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கிய மத்திய எஃகு துறை இணை அமைச்சர் பஹான்சிங் குலஸ்தே. அருகில், சக்தி அம்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர்.

வேலூர்

பூர்வ ஜென்ம புண்ணியங்களால் நமது ஆசைகள் வெற்றியடைய காரணமாக இருக்கிறது என  சக்தி அம்மா தெரிவித்தார்.

வேலூர் அடுத்த புரம் நாரா யணி பீடம் சார்பில் ‘வித்யா நேத்ரம்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாராயணி பீடத்தில் நேற்று நடைபெற்றது. 150 மாணவ, மாணவிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு  சக்தி அம்மா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

இதில், மத்திய எஃகு துறை இணை அமைச்சர் பஹான்சிங் குலஸ்தே சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, ‘‘இந்த அறக்கட்டளை சார்பில் சமுதாய முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், ஒரு பகுதியாக ‘வித்யா நேத்ரம்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக்காக வழங்கப்படும் இந்தத் தொகையை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் கடமை படிப்பது மட்டுமே. எனவே, மாணவர்கள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும். நாராயணி மருத்துவமனை மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.’’ என்றார்.

இதனை தொடர்ந்து  சக்தி அம்மா பேசும்போது, ‘‘இந்து தர்மத்தில் மனிதர்களை நல்வழிப்படுத்த பல விஷயங்கள் உள்ளன. அதில், பழமொழியும் ஒன்று. பேசப்படும் பழமொழிகளில் அர்த்தங்கள் நிறைய உள்ளது. ஆசை எல்லோருக்கும் உள்ளது. அதை நிறைவேற்ற பலரும் முயற்சி செய்வார்கள். அனைவருக்கும் வெற்றி கிடைக்குமா? என்றால் ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். ஏனென்றால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியங்கள்தான் வெற்றிக்கான காரணம். அதன் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் அவருக்கு நல்லது கிடைக்கிறது. நாம் அடுத்தவர்களுக்கு செய்த புண்ணியம்தான் அடுத்த ஜென்மத் திலும் நம்முடனே வரும்’’ என்றார்.

மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை மத்திய இணை அமைச்சர் மற்றும்  சக்தி அம்மா ஆகியோர் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x