Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

டிச.17-ல் வேலைநிறுத்தம் செய்ய நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள்

தஞ்சாவூர்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் டிச.17-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதற்கான நோட்டீஸை கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு நேற்று தபாலில் அனுப்பிவைத்தனர்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக உடனடியாக பேசி முடிவெடுக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக திருப்பித் தர வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் டிச.17-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு தொழில் தகராறு சட்ட விதிப்படி முறையாக வேலைநிறுத்த நோட்டீஸை கும்பகோணம் மண்டலத்துக்குட்பட்ட 250 பணியாளர்களின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க துணைத் தலைவர் டி.சந்திரன், பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி ஆகியோர், அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கு, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் மூலம் பதிவு தபாலில் நேற்று அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x