Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் அண்ணா மலையார் நேற்று பவனி வந்து அருள்பாலித்தார்.
தி.மலை அண்ணா மலையார் கோயிலில் கார்த் திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 29-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, அண்ணா மலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. முதல் நாளில் சந்திரசேகரரின் உற்சவமும், 2-வது நாளான நேற்று பராசக்தி அம்மனின் உற்சவமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 3-வது நாளான இன்று முருகரின் உற்சவம் நடைபெற உள்ளது.
மலையே மகேசன் என்றழைக்கப்படும் அண்ணா மலையை பக்தர்கள் கிரிவலம் செல்வது போல், திருவூடல் திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பிறகு என ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அண்ணாமலையார் அருள் பாலிப்பது வழக்கம். இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரின் கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில், சிறப்பு அலங்காரத்தில் உண்ணா முலை அம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று பவனி வந்து அருள்பாலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT