Published : 30 Nov 2020 03:12 AM
Last Updated : 30 Nov 2020 03:12 AM

நெல்லையப்பர் கோயிலில் சொக்கப்பனை தீபம்

திருநெல்வேலி காந்திமதி அம்மன் சமேத நெல்லையப்பர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/நாகர்கோவில்/தூத்துக்குடி

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை தீபம் நேற்று ஏற்றப்பட்டது.

இத் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவான நேற்று காலையில் மூலவர் மற்றும் உற்சவர்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதும், சொக்கப்பனை முக்கு பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது. பரணி தீபத்தி லிருந்து தீபம் எடுத்துவரப்பட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

இதுபோல் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவன் கோயில்கள், அம்மன் கோயில்களிலும் கார்த்திகை திரு விழாவையொட்டி சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளிலும் தீபம் ஏற்றி மக்கள் கார்த்திகை விழாவை கொண்டாடினர்.

நாகர்கோவில்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனர். மேலும் மாலையில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இருந்து தனிப்படகில் சென்ற குழுவினர் விவேகானந்தர் பாறையில் மகாதீபம் ஏற்றினர்.

பின்னர் அங்குள்ள பகவதியம் மன் கால் பாத சுவடுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பகவதியம்மன் கோயில் சன்னதி தெருவில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. மருந்துவாழ் மலை உச்சியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதுபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில், வேளிமலை முருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு பரணி தீபமேற்றப்பட்டது.

இரவு 8 மணிக்கு சுவாமி சந்திரசேகர், கவுரி அம்மன் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து, கோயிலில் 2 பெரிய தீபங்கள் ஏற்றப்பட்டன. ஊரடங்கு காரணமாக சொக்கப்பனை தீபம் ஏற்றப்படவில்லை.

செண்பகவல்லி அம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் மாலை 6.30 மணிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் செந்திலாண் டவர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.

காலை முதல் மாலை 6 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாலையில் கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கோயில் முன்புள்ள கடற்கரையில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x