Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை கள ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பார்வையாளர் மு.கருணாகரன் உத்தரவிட்டார்.
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநரும், திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11 லட்சத்து 42,775 ஆண்கள், 11 லட்சத்து 60,809 பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவர் 258 பேர் என மொத்தம் 23 லட்சத்து 03842 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 16-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் திருத்தம் தொடர்பான சுமார் 42834 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அலுவலர்களும் கண்டிப்பாக கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், உடனடியாக முகவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT