Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM
திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தென்காசி/ தூத்துக்குடி
தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில்நடத்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, மறியலில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டத்தில் 650, கன்னியாகுமரியில் 1,531, தென்காசியில் 781, தூத்துக்குடியில் 893 பேர் என மொத்தம் 3,855 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள், விவசாய சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்தப் பட்டன.
நெல்லையில் 650 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், களக்காடு,நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் காசிவிஸ்வநாதன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்டிடியூ, சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியல் செய்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 650 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமரியில் 1,531 பேர் கைது
நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையம் அருகே நடந்த மறியலில் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கமோகன், மகாலிங்கம், இளங்கோ, தக்கலையில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராஜீ உட்பட பலர் கலந்துகொண்டனர்.பறக்கையில் ஆஸ்டின் எம்எல்ஏ,நாகர்கோவிலில் எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், விஜயதரணி, தக்கலையில் மனோதங்கராஜ் எம்எல்ஏ, கருங்கல்லில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் மறியலில்ஈடுபட்ட 1,531 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் 781 பேர் கைது
இதேபோல், செங்கோட்டையில் 108 பேர், ஆலங்குளத்தில் 101, பாவூர்சத்திரத்தில் 32, கடையத்தில் 64, புளியங்குடியில் 58, சிவகிரியில் 100, ராயகிரியில் 19, சங்கரன்கோவி லில் 137, திருவேங்கடத்தில் 32 மற்றும்கடையநல்லூரில் 50 பேர் என மாவட்டம் முழுவதும் 11 இடங்களில், 781 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் 893 பேர் கைது
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3 ஷிப்ட்டுகளில் பணி செய்யும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். சரக்கு கையாளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.தூத்துக்குடியில் நடைபெற்ற மறியலுக்கு எல்பிஎப் நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். 17 பெண்கள் உட்பட 93 பேரைபோலீஸார் கைது செய்தனர். திருச்செந்தூரில்46 பேர், வைகுண்டத்தில் 47, ஓட்டப்பிடாரத்தில் 55, கோவில்பட்டியில் 80,கழுகுமலையில் 150, கயத்தாறில் 40, விளாத்திகுளத்தில் 157, எட்டயபுரத்தில் 118, சாத்தான்குளத்தில் 19 மற்றும் நாசரேத்தில் 53 பேர் என மாவட்டம் முழுவதும் 360 பெண்கள் உட்பட 893 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT