Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

‘நிவர்’ புயல் கனமழையால் பாதிப்பு மரக்காணம் கடலோர பகுதியில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம் 44 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு விநியோகம்

மரக்காணம் அருகே வெள்ளகுளம் பகுதியில் புயல் பாதிப்புகள் குறித்து அமைச்சர் சிவி சண்முகம் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

‘நிவர்’ புயலையொட்டி முன்தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், தாழ்வான இடங்களில் வசிக்கும்பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விழுப்புரம் மாவட்ட நிர்வா கத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்து தடை செயப் பட்டு, வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டதால் மக்களின் இயல்புவாழ்க்கை நேற்று முற்றிலும் பாதிக்கப் பட்டது. டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

மரக்காணம் பகுதியில் உள்ள கடற் கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர். மீனவ கிராமங்களில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அப்பகுதியில் வாழும் மீனவமக்கள் வெளியேற்றப்பட்டு 44 முகாம் களில் தங்க வைக்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம், பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், மண்டவாய்புதுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, கூனிமேடுகுப்பம், நொச்சிக்குப்பம், பனிச்சமேடு, எக்கியார்குப்பம், அனுமந்தை குப்பம், செட்டிநகர், அழகன்குப்பம் ஆகிய 12 மையங்களில் 277 ஆண்கள், 297 பெண்கள், 118 குழந்தைகள் என 692 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

மரக்காணம் அடுத்த மானூர் கிராமத்தில் மின் இணைப்பு இல்லாததால் பம்புசெட் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவும் மின் இணைப்பு பெற அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்ட பின் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மரக்காணம், பொம்மையார்பாளையம் உள்பட மீனவ கிராமங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத் துறை, காவல் கட்டுப்பாட்டு துறை மற்றும் மருத்துவத் துறை உள்பட அனைத்துத் துறைகளும் மீனவ கிராமத்தில் முகாமிட்டு உள்ளன. இம்முகாமில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் ஆய்வு மேற்கொண்டார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் கடலோர கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். கிழக்குக் கடற்கரை சாலையை வனத்துறையும் மீட்புக் குழுவும் கண்காணித்து வருகின்றனர் .

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

மீனவர்கள் போராட்டம்

மாவட்ட அளவில் பேரிடர் கால சிறப்பு பயிற்சி பெற்ற 300 போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணிக்கான பயிற்சி முடித்த 60 பேர்,என 1,700 போலீஸார் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நேற்று பிற்பகல் முதல் படிப் படியாக மின் விநியோகம் தடை செய் யப்பட்டது.

இதற்கிடையே நடுக்குப்பம் மீன வர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். “இங்குள்ள சுமார் 50 படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவில்லை. இதனால் வெள்ள காலத்தில் பாதிக்கப்படுகிறோம்” என்றனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் அங்கு வந்துமீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x