Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

உடுமலை தாலுகா கோட்டமங்கலம் ஊராட்சியில் பொது வழித்தட ஆக்கிரமிப்புகளால் சாலை சேதம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் புகார்

பொது வழித்தட ஆக்கிரமிப்புகளால் சேதமடைந்த சாலையை சீரமைத்துத்தர வலியுறுத்தி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த உடுமலை வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் ஊராட்சி கிராம மக்கள்.படம்:இரா.கார்த்திகேயன்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

உடுமலை வட்டம் கோட்டமங்கலம் ஊராட்சி மக்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊராட்சியின் கிழக்கு பகுதியில் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். பூர்வீகமாக பயன்படுத்தி வந்த பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் செல்ல முடிவதில்லை. சில நாட்களுக்கு முன்பு மழை நீர் தேங்கி, புதிதாக அமைக்கப்பட்ட சாலை முழுவதுமாக சேதமடைந்தது. இதுதொடர்பாக ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

பள்ளி குழந்தைகள், விவசாயிகள் உட்பட பலருக்கும் பிரதான பாதையாக இந்த சாலை இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல வடிகால் அமைத்து, வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைத்துத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் இணைச் செயலாளர் ஜி.ராமநாதன் அளித்த மனுவில், "மேற்குத்தொடர்ச்சி மலை சின்னக்கல்லாறு வனப்பகுதி இயற்கையில் உருவான ஜீவநதிகளின் நீர்வரத்தை ஆய்வு செய்வது குறித்து வேளாண் விஞ்ஞானிகளுடன் பலமுறை கலந்துரையாடினோம்.

கோவை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சின்னக்கல்லாறு வனப்பகுதியில் உருவாகும் ஜீவ நதிகளின் நீர் வரத்து தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு

திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையை சேர்ந்த 17-வது வார்டு பொதுமக்கள் கூறும்போது, "புதிய காமராஜர் நகர், சோழன் நகர், ஜேப்பி நகர், அம்மன் நகர் மற்றும் ஜி.என். நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகிறோம். ஏற்கெனவே எங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராடி வருகிறோம். தற்போது, மற்றொரு புதிய டாஸ்மாக் கடையை அமைக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி பல்வேறு தரப்பு பொதுமக்கள் வரை பலரும் பயன்படுத்தும் பிரதான பாதையில் டாஸ்மாக் கடை அமைந்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும். பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும். டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

சின்னாண்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், "பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், கோழிப்பண்ணை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்கள் ஏராளமானோர்பங்கேற்கும், பெரியாண்டிபாளை யம் மாரியம்மன் கோயிலுக்கு பொங்கல் பூச்சாட்டு விழா வரும் 29-ம் தேதி முதல் டிச.10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x