Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

பிஏபி தண்ணீர் பாசன திட்ட விவகாரம் கொலை மிரட்டல் விடுப்பதாக உதவிப் பொறியாளர்கள் புகார் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் விளக்கம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பிஏபி பாசன திட்ட (பாசன பிரிவு எண்:2) உதவிப் பொறியாளராக இருப்பவர் க.பாஸ்கரன் (35). இவர் தலைமையில் தமிழக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சார்பில் காங்கயம் காவல் நிலையத்தில் நேற்று அளிக்கப்பட்ட புகார் மனு:

பாஸ்கரன் ஆகிய நான், பாசன பிரிவு எண்:1 உதவி பொறியாளர் ப.ஜெகதீஷ், உதவிப் பொறியாளர் ஏ.எம்.கோகுலசந்தான கிருஷ்ணன், வெள்ளகோவில் உதவிப் பொறியாளர் உ.லாவண்யா ஆகியோர் ஆயக்கட்டு விரிவாக்க காங்கயம் உபகோட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம்.

காங்கயம் வட்டத்துக்கு உட்பட்ட பிஏபி பாசன திட்ட பகுதிகளுக்கு 2-ம் மண்டல பாசனம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பாசன சபை தலைவர்கள் மற்றும் பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறை யில் உள்ள மதகுகளுக்கு ஷிஃப்ட் அடிப்படையில் தண்ணீர் வழங்கும் வழக்கத்தை மாற்றி, 6 நாட்கள் ஷிஃப்ட் இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று, கடந்த 17-ம் தேதி காங்கயம் ஆயக்கட்டு விரிவாக்க உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சில விவசாயிகள் மனு அளித்தனர்.

கடந்த 20-ம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, மேற்கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த ஆர்.வெங்கடேச சுதர்சன் (வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்) தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் வந்து, வழங்க இயலாத சில நீரியியல் விவரங்களை கோரினர். சில விவரங்கள் வழங்கப்பட்ட போதிலும், வழங்க இயலாத விவரங்களை அலுவலக முத்திரையுடன் கையெழுத்திட்டு வழங்குமாறு கோரினர்.

மேலும், எங்களை தரக்குறைவாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "பிஏபி ஆரம்ப திட்டப்படி, 4 மண்டலங்களிலும் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு விவசாயிக்கு 14 நாட்கள் தண்ணீர் கிடைக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையால், 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி 6 நாட்கள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

இதற்கு பிஏபி பிரதான வாய்க்காலை ஒட்டியுள்ள 62 தேங்காய் நார் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதே முக்கிய காரணம்.

அதோடு 100 ஏக்கர் பரப்பிலான 5 குளங்களுக்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும், திருமூர்த்தி பிரதான கால்வாயை ஒட்டி தனியார் நிலங்களில் கிணறு வெட்டி, அதிலிருந்து தண்ணீர் எடுத்து பிஏபி திட்டத்தில் இல்லாத பகுதிகளுக்கு பாசனம் நடைபெறுகிறது.

இதுதொடர்பான புகாரின்பேரில் ஆட்சியர் உத்தரவிட்ட பிறகும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 20-ம் தேதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அவர்கள்தான் அழைத்தனர். அங்கு சென்ற பிறகு கூட்டம் ரத்து என ஒட்டியிருந்தனர். இதுகுறித்து கேட்டபோதே வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயிகளை அதிகாரிகள் எடுத்தெறிந்து பேசினர். நான் பேசியபோதும் ஒரு சில வார்த்தைகள் அதிகமாக வந்துவிட்டன, அதை மறுக்கவில்லை. மேலும் விவசாயிகள் கேள்விகள் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் தங்களது கடமையை சரிவர செய்திருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்காது. இவ்விவகாரத்தில் என்னை முடக்க பொய் புகார் அளித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x