Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் செயல்விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

திருப்பூர்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முதலாவது அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய வேளாண்மைஆராய்ச்சி குழுமத்தின் முதன்மைவிஞ்ஞானி அ.பாஸ்கரன், விதை மையம் இயக்குநர் செ.சுந்தரேஸ்வரன் மற்றும் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளின் இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் பேசும்போது, "வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த உபதொழில்களில் நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் பெறும் வகையில், கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் பொங்கலூரில் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வயல்வெளி ஆய்வுகள் தொடங்கி, செயல்விளக்கத் திடல் மற்றும் களப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.புதிய ரகங்களில் தரமான விதைஉற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை துறைக்கும், விவசாயிகளுக்கும் வழங்கபட்டு வருகிறது.

பாசிப்பயறு கோ 8, சணப்பை கோ 1, மணத்தக்காளி கோ 1, வெண்டை வீரிய ஒட்டு கோ 4, மிளகாய் வீரிய ஒட்டு கோ 1, நிலக்கடலை டி.எம்.வி. 14 மற்றும் பி.எஸ்.ஆர்.2, தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு, மண் புழு உரம் தயாரித்தல், மீன் வளர்ப்பு, மூடாக்கு அமைத்தல், நீர் மேலாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, புதிய ரக தீவனப் பயிர்கள், மாடி காய்கறித் தோட்டம், மற்றும் செடி முருங்கை போன்ற பல்வேறு வகையான மாதிரி செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

வேளாண்மை சார்ந்த நவீனதொழில்நுட்பம் குறித்த கையேடுகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநர் மு.ஜவஹர்லால் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x