Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு நிவாரணம் வழங்க தொமுச வலியுறுத்தல்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (26). திருப்பூர் மின் பகிர்மான வட்டம் கணபதிபாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணபதிபாளையம் ராயல் அவென்யூ பகுதியிலுள்ள மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோளாறை சரி செய்யும் பணியில் விஜயன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துசம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலின் பேரில் பல்லடம் போலீஸார் விரைந்து சென்று, விஜயனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொமுச கண்டனம்

இதுகுறித்து மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன் கூறும்போது, ‘‘திருப்பூர் பகுதியில் பணிகளின்போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இவ்வாறு மின் விபத்துகளில் பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த வித மருத்துவ உதவியும், உரிய நிவாரணமும் வழங்காமல், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் யாரென்று தெரியாது எனக்கூறி அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவதுதான் இதற்கு முக்கியக் காரணம். உயிரிழந்த விஜயனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x