Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
மாதத்துக்கு 14 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டுமென, பிஏபி கடைமடை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கூறியதாவது:
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் (பிஏபி) மூலமாக பல ஆயிரம் ஏக்கர் பயன்பெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பி.ஏ.பி.-யின் கடைமடையான எங்கள் பகுதிகளுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை. பி.ஏ.பி. 4 மண்டலத்துக்கும், உரிய முறையில் பாசன நீர் விநியோகம் செய்யப்பட்டது. 2006-ம் ஆண்டு பாசனப் பகுதி விரிவாக்கத்துக்கு பிறகு, உரிய முறையில் நீர் விநியோகம் இல்லை. பி.ஏ.பி. சட்ட விதிகளின்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும். ஆனால், வெறும் 3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கொடுத்து, எஞ்சியுள்ள 28 நாட்கள் அடைக்கப்படுகிறது. இதனால் கடைமடைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காமல், பயிர்கள் கருகும் பகுதிகளும் உண்டு.
கால்நடைகளுக்குகூட போதாது
முறையற்ற நீர் விநியோகம்
ஆரம்ப காலத்தில் மண் வாய்க்காலாக இருந்தபோதுகூட, பி.ஏ.பி. பாசன சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது, கான்கிரீட் வாய்க்காலாக மாற்றப்பட்டும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக வருவதில்லை. இதுதொடர்பாக பிஏபி பொறியாளர்களிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை. முறையற்ற நீர் விநியோகத்தால் சில கடைமடை பகுதிகளுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைப்பதில்லை. இதனால் எங்கள் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. சமச்சீர் பாசனம் என்பது பிஏபியை பொறுத்தவரை பெரும் கேள்வியாக உள்ளது. பிஏபி பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டால்கூட தவறான தகவல் அளிக்கின்றனர்.காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் வரையும், உடுமலைப்பேட்டை தொடங்கி பொங்கலூர் வரை உள்ள பிஏபி பாசனப் பகுதிகளையும் ஆட்சியர் முழுமையாக கள ஆய்வு செய்ய வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து எங்கள் பகுதி வரை உள்ள 126 கி.மீ. பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில், தொழிற்சாலைகள் மற்றும் சில பெரிய விளைநிலங்களுக்கும் தண்ணீர் திருடப்படுகிறது.
உரிய நடவடிக்கை இல்லாததால், தண்ணீர் திருட்டு மிகப்பெரிய அளவில் தொடர்கிறது. இதனால், பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், தங்களது வாழ்க்கையை தொலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT