Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆவின் பால் உப பொருட்களின் விற்பனை ரூ.1 கோடி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால் பண்ணையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது, பால் பதப்படுத்தும் பிரிவு, வெண்ணை உற்பத்தி பிரிவு, நெய் உற்பத்தி பிரிவு, பால் பவுடர் பேக் செய்யும் பிரிவு, பால்கோவா தயாரிக்கும் பிரிவு, பால் பொருட்கள் இருப்பு, குளிரூட்டும் பிரிவு மற்றும் பால் பாக்கெட் செய்யும் பிரிவுகளை ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலிருந்து சுமார் 40 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு கிருஷ்ணகிரி பால் பண்ணையில் தினசரி 4 டன் பால் பவுடர், 3 டன் நெய், வெண்ணெய் 3 டன், பால்கோவா, குல்பி ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், தயிர், மோர் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வார பால் பணம் ரூ.12 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கு பால் உப பொருட்களின் விற்பனை இலக்கு ரூ.1 கோடி என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
ஆய்வின் போது ஆவின் தலைவர் குப்புசாமி, பொது மேலாளர் சாரதா, உதவி பொது மேலாளர் குமரன், துணை பொது மேலாளர் பிரசாத், ஆணையாளர் சந்திரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT