Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM
திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி/நாகர்கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் பெருமளவு தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 63 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 42, சேர்வலாறு- 34, மணிமுத்தாறு- 25, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 15, அம்பாசமுத்திரம்- 29, சேரன்மகாதேவி- 26, ராதாபுரம்- 6.2, நாங்குநேரி- 19.5, களக்காடு- 55.4, மூலக்கரைப்பட்டி- 40, திருநெல்வேலி- 11.
அணைகள் நிலவரம்
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 97.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 635 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 409 கனஅடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 89.63 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 34 அடியாகவும் இருந் தது.
தொடர் மழை
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்று பகலில் இடைவிடாமல் மிதமான மழை நீடித்தது. இதனால் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 3 மி.மீ., கருப்பாநதி அணை, செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 65.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 58.10 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 97 அடியாகவும் இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் பரவலாக மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது.இதனால் தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையினர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சிஅகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பொருட்கள் வாங்க வந்த மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். உப்பளங்கள் அனைத் தும் தண்ணீரில் மூழ்கின.
கால்வாய், ஓடைகளில் காட் டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 18, காயல்பட்டினம் 11, குலசேகரன்பட்டினம் 4, விளாத்திகுளம் 0.6, கயத்தாறு 9, கடம்பூர் 9, மணியாச்சி 18, கீழஅரசடி 0.5, சாத்தான்குளம் 5.2, வைகுண்டம் 57, தூத்துக்குடி 21 மி.மீ. மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில் இருந்துநேற்று மதியம் வரை பரவலாகமழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 12 மிமீ மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 9, கன்னிமாரில் 7, கொட்டாரத்தில் 5, குழித்துறையில் 7, பேச்சிப்பாறையில்10, நாகர்கோவிலில் 7, பெருஞ்சாணியில் 10, புத்தன் அணையில் 9, சிவலோகத்தில் 7, சுருளோட்டில் 6, மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினாவிளை ஆகிய இடங்களில் தலா 8 மிமீ மழை பெய்திருந்தது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT