Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
தேசிய அளவிலான பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.29 லட்சம் ஊக்கத்தொகையை ஆட்சியர் வழங்கினார்.
2018-19-ம் ஆண்டுக்கான 64-வது பள்ளிகள்கூட்டமைப்பு,தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்ற 7 நபர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.14 லட்சத்துக்கான காசோலைகள், 2-ம் பரிசு பெற்ற 4 நபர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம்மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகள், 3-ம் பரிசு பெற்ற 9 நபர்களுக்குதலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 9 லட்சத்துக்கான காசோலைகள் என மொத்தம் 20 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.29 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் கூறும்போது, ‘‘பஞ்சாப், மத்தியபிரதேசம், ஆந்திரா, குஜராத், மணிப்பூர், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய அளவில் நடந்த வாள் சண்டை, தேக்வாண்டோ போட்டி, பூப்பந்துப் போட்டி, வளையப்பந்து, கையுந்துப் பந்து, கடற்கரை கையுந்துப் பந்து, கோ-கோ, ரோப் ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதலிடம், 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது,’’ என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, கல்வி ஆய்வாளர் ஜெயராமன், கால்பந்து பயிற்சியாளர்கள் அப்துல்லா ஷா, டேக்வோண்டா பயிற்றுநர் ராஜகோபால், கைப்பந்து பயிற்றுநர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT