Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் ஜவுளி, மளிகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் பூக்கள் விற்பனை உயர்வு: பட்டாசு வியாபாரம் மந்தம்

திருநெல்வேலி டவுன் வடக்கு ரதவீதியில் நேற்று பெய்த மழையால் தேங்கியிருந்த தண்ணீர். மழையால் பெரிய கடைகளில் மட்டுமின்றி சாலையோர வியாபாரமும் நேற்று பாதிக்கப்பட்டது. (அடுத்த படம்) பாளையங்கோட்டையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நேற்றுவரை விற்பனை குறைவாகவே இருந்தது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று விற்பனை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

ஜவுளி, மளிகைப் பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட தீபாவளி பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது. பாவூர்சத்திரம் சந்தையில் ரூ. 10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின. பட்டாசு விற்பனை இன்று சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும். நடப்பாண்டும், நேற்று முன் தினம் வரை கடைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. மாநகரில் நேற்று மதியம் 1 மணிக்கு பிறகு, நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை அவ்வப்போது மழை பெய்தது.

மழை காரணமாக, திருநெல் வேலி டவுன் வடக்கு ரதவீதி, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, பலகாரக் கடைகளில் கூட்டம் இல்லை. இதனால் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சாலையோரக் கடைகளில் பொருட்களை விற்பனை செய்வோர் மழையால் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், பாளையங் கோட்டையிலும், திரு நெல்வேலியிலும் ஆர்டர்களின் பேரில், தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடை பெற்றது. நேற்றும் இப்பணிகள் தொய்வின்றி நடைபெற்றது.

கன்னியாகுமரி

தீபாவளிக்கு ஒரு நாளே இருப்பதால், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, செம்மாங்குடி சாலை, கோட்டாறு, பார்வதிபுரம் சாலை, நீதிமன்ற சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகள் வாங்க குடும்பத் துடன் ஏராளமானோர் கூடினர். மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், குளச்சல், கருங்கல், திங்கள்நகர், கன்னியாகுமரி பகுதியிலும் காலையில் இருந்து இரவு வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

தோவாளை மலர்ச்சந்தை

மளிகைப் பொருட்கள் வாங்க கோட்டாறு பகுதியில் மக்கள் அதிகமானோர் கூடினர். வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் ஆகியவற்றிலும் ஏராளமான மக்கள் திரண்டனர். தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்தது. தீபாவளி தேவைக்கான விற்பனை இன்று களைகட்டும் என்பதால், வெளியூர்களில் இருந்து பூக்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. ஜவுளி, நகை, வீட்டு உபயோக மின்னணு பொருட்கள், செல்போன் ஆகிய கடைகளைக் கொண்ட, பிரபல வணிக வளாகத்தின் பொதுமேலாளர் கூறும்போது, ``கரோனாவால் ஜவுளி மற்றும் பொருட்கள் விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வியாபாரம் சற்று குறைந்திருந்தாலும் ஒரேயடியாக மந்தமாகிவிடவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனை நன்றாக இருந்தது. அதன் பிறகு தினமும் மாலை வேளைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது” என்றார்.

கோவில்பட்டி

கரோனா ஊரடங்கால் கோவில்பட்டியில் கடந்த இரு வாரங்களாகத்தான் ஜவுளி விற்பனை தொடங்கியது. சாலையோர துணி வியாபாரிகள் நேற்றுதான் கடைகளை அமைத்தனர். ஜவுளிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

பூக்கள் வரத்து குறைவால் விற்பனையும் சுமாராக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை, கனகாம்பரம் தலா ரூ. 1,000, சம்பங்கி 200, கேந்தி 100, பச்சை 50, அரளி 200, செவ்வந்தி 200, கலர் பிச்சி 800, சாதாரண ரோஜா .250, சிவப்பு ரோஜா 200, ஆப்பிள் ரோஜா 300 மற்றும் பன்னீர்ரோஜா ரூ.250க்கு விற்க்கப்பட்டது. கடந்த ஆண்டை விட பூக்கள் விலை கிலோவுக்கு ரூ.100 வரை குறைவாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூ.10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியையொட்டி தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், கடையம், ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம், வாசுதேவநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஜவுளிக் கடைகள், ஸ்வீட் கடைகள், பட்டாசு கடைகளில் நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பாவூர்சத்திரத்தில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். தீபாவளியையொட்டி நேற்று இச்சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாயின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x