Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் அரசின் பல்வேறு திட்டங்களுக்காக பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் கணக்கெடுப்புப் பணியாளர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் புதுவாழ்வு திட்டம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் விவரம் சேகரிப்பு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கான பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் இக்கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தந்த ஊராட்சிகளில் உள்ள கணக்கெடுப்புப் பணியாளர்கள் அந்த பணிகளை வீடு , வீடாக சென்று அதற்கான படிவத்தில் தேவை யான விவரங்களை சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரையோ அல்லது அந்த குடும்ப உறுப்பினரையோ சந்தித்து அவர்களிடம் விவரம் கேட்டு அவர்கள் முன்னிலையில் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆனால், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப் பாளர்கள் தங்களுக்கான விதி முறைகளை பின்பற்றாமல் விவரம் சேகரிக்கும் கிராமத்தில் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு கிராம மக்களை தாங்கள் உள்ள இடத்துக்கு வரவழைக்கின்றனர். மேலும், வரும்போது விவரம் தெரிவிக்க வருபவர் அவரது ரேஷன் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம், ஆதார் அட்டை ஆகிய வற்றுடன் அதற்கான நகலையும் எடுத்து வர வேண்டும் என கூறுகின்றனர்.
பிறகு, அதற்குரிய படிவத்தில் விவரங்களை எழுதாமல் வெற்று படிவத்தில் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர். ஒரு சில பயனாளிகள் வெளியூர் சென்றிருந்தால், அவர்கள் தங்களது ஆவண நகல்களை கணக்கெடுக்கும் பணியாளரின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். படிவங் களில் தகவல்கள் சரிவர பதிவு செய்யப்படுகிறதா? என பொது மக்களுக்கு தெரிவதில்லை. ஆதார் எண், ரேஷன் கார்டு, வங்கி சேமிப்பு புத்தக நகல்களை பெற்றுச் சென்று பணியாளர்கள் தங்களுடைய வீடுகளில் அமர்ந்து இந்த பணிகளை செய்வதாக கூறப் படுகிறது.
இதனால் சரியான தகவல்கள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை பயனாளிகள் சரிபார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று சம்பந்தப்பட்டவர்களின் முன்னிலையில் விவரம் சேகரித்து படிவங்களை பூர்த்தி செய்து பிறகு கையெழுத்து பெற வேண்டு மென அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘அனைத்து ஊராட்சிகளிலும் கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தான் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதை தவிர்த்து, ஒரே இடத்தில் அமர்ந்து பயனாளிகளை வர வழைத்து கணக்கெடுப்பது குற்றச்செயலாகும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்பில் அவ்வப்போது நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம்.
இது போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இது தொடர்பாக மகளிர் திட்ட அலுவலருக்கு எங்கள் தரப்பில் இருந்து எழுத்துப் பூர்வமாக புகார் அனுப்புவோம். அவர்கள் தான் இதற்கான நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT