Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
வேலூர் சதுப்பேரி ஏரிக்கான மோர்தானா கால்வாயை தூர் வாராததைக் கண்டித்து, பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பாக திமுக சார்பில் வரும் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்குமார் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘திமுகவில் எல்லோரும் நம்முடன் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இது வரை 48 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங் கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் விரைவில் ஒரு லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஜார்தான்கொல்லை மலைகிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியினர் அவர்களை சான்றிதழ் வழங்காமல் தடுத்து வருகின்றனர். பாஜக அரசியலுக் காகவே வேல் யாத்திரையை தொடங்கியுள்ளனர். தேர்தல் வருவதால் அவர்களுக்கு வேல் மீது ஞாபகம் வந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தாமதமாக நடந்து வருவதால் தெருக்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக உள்ளன. பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் புதிய சாலைகளை போடவில்லை. திமுக எம்எல்ஏக்கள் இருப்பதால்அவர்களுக்கு கெட்டப் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே தெருக்கள் சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. மாநகராட்சியை கண்டித்து தீபாவளிக்குப் பிறகு போராட்டம் நடத்தப்படும்.
நீர் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக வேலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள ஒரு ஏரியில் கூட தண்ணீர் இல்லை. மோர்தானா அணை நிரம்பியுள்ளதால், வலது புற கால்வாய் வழியாக பள்ளி கொண்டாவில் இருந்து சதுப்பே ரிக்கு தண்ணீர் வர வேண்டும். இந்தக் கால்வாயை தூர்வார வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும் பொதுப்பணித்துறை செயலாள ரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், வரும் மழைக் காலத்தில் சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இதைக் கண்டித்து, வேலூர் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பாக திமுக சார்பில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கே.வி.குப்பத்தில் அரசு பணிக்கு எனக்கூறி மணல் கடத்தப்படுகிறது’’ என்றார்.
அப்போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், வேலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமதுசகி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT