Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

சேலம் அருகே தொழிலாளியை கொன்ற சகோதரர்கள் கைது

சேலம்

சேலம் அருகே போர்வை காணாமல் போன தகராறில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அம்மாப் பேட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பழனிசாமி (45). திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான பழனிசாமி, குடும்பத்தினருடன் தகராறு செய்துவிட்டு, வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் வீராணத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகில் தங்கி வந்தார்.

இந்நிலையில், அம்மாப் பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் தர்மேந்திரன் (42), விஜி (37) ஆகியோரும் குடும்பத்தினரைப் பிரிந்து வீராணம் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜி, தர்மேந்திரன் ஆகியோர் பயன்படுத்தி வந்த போர்வை காணாமல் போனது. அதனை பழனிசாமி எடுத்துக் கொண்டதாகக் கூறி, அவரை சகோதரர்கள் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனிசாமி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, வீராணம் போலீஸார் விசாரணை நடத்தி தர்மேந்திரன், விஜி ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x