Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

வரும் டிசம்பர் மாதத்துக்குள் வேலூர் கஸ்பாவில் விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், மாநகராட்சி ஆணையர் சங்கரன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள், கஸ்பா விளையாட்டு மைதானம், சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அறிவியல் பூங்கா என சுமார் ரூ.147 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி களை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் கஸ்பா பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, தடகள ஓடுதளம், நடைபாதை மற்றும் கிரிக்கெட் போட்டியை நடத்தும் வசதியுடன் 300 பார்வை யாளர்கள் அமரும் வகையிலான ஒரு அரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சண்முகசுந்தரம், வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரூ.46 கோடி மதிப் பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், அருகில் உள்ள பல் அடுக்கு வாகனம் நிறுத்துமிட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். இந்தப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெறுவதையும் பார்வை யிட்டார்.

பின்னர், சர்க்கார்தோப்பு பகுதியில் 2.40 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ரூ.13 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் தொடங் கப்பட உள்ளது. இதற்காக, சூரிய ஒளித்தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு செய்தார். அதேபோல், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட்சிட்டி திட்ட கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறி யாளர் சீனிவாசன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்தரசேனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x