Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
வந்தவாசியில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 9 வட்டங்களில் நடத்தப்பட உள்ளது. ஆரணியில் கடந்த 3-ம் தேதி சிறப்பு முகாம் தொடங்கியது. இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு முகாமில் அடையாள அட்டை பெற நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் குவிந்தனர். ஓரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், அவர்களை வரிசைப்படுத்த முடியாமல் வருவாய் மற்றும், காவல்துறையினர் திணறினர். இட நெருக்கடியால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. நெரிசலில் சிக்கி மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி கள் கூறும்போது, “சிறப்பு முகாமுக்கு தேவையான முன்னேற் பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. கூடுதல் எண்ணிக் கையில் மருத்துவர்களை வரவழைக்கவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, அடையாள அட்டை வழங்க பரிந்துரைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதனால், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உணவு வழங்கி யதிலும் தேவையாள நடவடிக்கை எடுக்காததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காலையில் வந்த பலரும் இரவு வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளை வரவழைத்து அலட்சியப் படுத்தியது வேதனை தருகிறது.
அடுத்தடுத்து நடைபெற உள்ள சிறப்பு முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்” என்றனர்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 490 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தி.மலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT