Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரசித்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ளது கருவேப்பம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் வரசித்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தாவுக்கும் புதிதாக கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒரே வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த கோயில்களுக்கான குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், கும்பாலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் கோயிலில் இரண்டாம் கால யாக சாலை பூஜை, தத்வார்ச்சனை, விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணி அளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பின்னர் கிராம மக்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கோயிலின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பூ அலங்காரத்துடன் கூடிய சிறப்பு வாகனங்களில் விநாயகர், தர்மசாஸ்தா வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT