Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழைபொழிவு இல்லாததால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஒன்றியப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சராசரி அளவை எட்டியது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் மானாவாரியாக அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.
தென்மேற்குப் பருவ மழையால் ஒரு மாதம் செழித்து வளர்ந்த பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் சேவையை பூர்த்தி செய்ய வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
அக்டோபர் தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கி இருந்தால் பயிர்களைக் காப்பாற்றி இருக் கலாம். ஆனால், இதுவரை பருவ மழை ஆங்காங்கே பெய்கிறது. இம்மாவட்டத்தில் அதிக மழையின்றி பயிர்கள் கருகத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் கருகிய நிலையில் காணப்படுகிறது. ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், சீவல்சரகு, வண்ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் கருகி விட்டதால், வயல்களில் கால்நடை களை மேயவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்ததால் பயிர்களைக் காப்பாற்ற முடிய வில்லை. எனவே மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை அரசு இழப்பீடு வழங்கவேண்டும். கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் வரு வாயை இழந்தோம். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT