Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
உலக பக்கவாத நோய் விழிப்பு ணர்வு தினத்தையொட்டி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன்தினம் மூளை நரம்பியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ச.மருததுரை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், மூளை நரம்பியல் துறைத் தலைவர் தங்க ராஜ் பேசியதாவது: உலக பக்கவாத தினம் அக்.29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதிக உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மது அருந்துதல், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இதய நோய் போன்றவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது. கவனச் சிதறல், கடுமையான தலைவலி, பார்வை குறைபாடு, முகம், கை, காலில் உணர்ச்சியின்மை அல்லது செயலிழப்பு, பேச்சு குளறுதல், நடப்பதில் சிரமம் போன்றவை இதற்கான அறிகுறிகள்.
இந்தியாவில் 1 லட்சம் பேரில் கிராமப்புறங்களில் 265 பேரும், நகர்ப்புறத்தில் 424 பேரும் என மொத்தம் 689 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த ஆண்டில் பாதிக் கப்பட்ட 370 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பக்கவாத நோய் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஊனத்தின் தன்மை குறையும். வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் இந்நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகள் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு, கசிவு, வெடிப்பு இருப்பதைக் கண்டறியலாம். திடீரென பக்கவாதம் ஏற்பட்டால், ஆடை யின் இறுக்கத்தைத் தளர்த்தி சீரான காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு தண்ணீரோ, உணவோ கொடுக்கக்கூடாது என்றார்.
கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், அரவிந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, மூளை நரம்பியல் நிபுணர் லெனின் சங்கர் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT