Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணி கருத்துகேட்புக் கூட்டத்தில் வரவேற்ற மீனவ மக்கள்

பொன்னேரி

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணி மேற்கொள்வது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில், அப்பணியை பெரும்பாலான மீனவ மக்கள் வரவேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியும்,வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரப் பகுதி, மணல் திட்டுக்களால் அடிக்கடி தூர்ந்து போகிறது. இதனால், பழவேற்காடு பகுதியில் உள்ள 52-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

ஆகவே, மீனவ மக்கள் பழவேற்காடு ஏரியை தூர்வாரி நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன் விளைவாக ரூ.27 கோடியில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் நிலைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணியைத் தொடங்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற ஏதுவாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பொதுமக்களின் கருத்துகேட்புக் கூட்டம் நேற்று பழவேற்காடில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், மீன்வளத் துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி இயக்குநர் அஜய் ஆனந்த், பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா, வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பழவேற்காடு ஏரிமுகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணி குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பழவேற்காடு ஏரியில் வண்டல் வெளியேற்ற விகிதம், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப, கரையோர மணல் திட்டுக்கள் பெரும்பாலும் இடம்பெயர்கின்றன. சில சமயங்களில் முகத்துவாரத்தையும் மூடுகிறது. இதனால், படகுகளின் எளிதாக இயக்கத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

ஆகவே, பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில், முகத்துவாரப் பகுதி தூர்வாரப்பட்டு, ஏரியின் வடக்கு கரையில் 160 மீ., தெற்கு கரையில் 150 மீ. அளவுக்கு கற்களால் ஆன 2 கடல் அரிப்பு தடுப்பான்கள் (நேர்க்கல் சுவர்கள்) அமைக்கப்பட உள்ளன.

இப்பணி நிறைவுற்றால், அனைத்துக் காலங்களிலும் முகத்துவாரம் வழியாக மீன்பிடி படகுகள் சுலபமாக கடலுக்கு சென்று வரலாம்.விபத்துகளும் தவிர்க்கப்படும். வடக்கு மற்றும் தென்திசைகளில் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறி மாறி வீசும் காற்றால் உருவாக்கப்படும் மணல் திட்டும் தவிர்க்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், கடல் மற்றும் பழவேற்காடு ஏரியின் இடையே தொடர்ச்சியான நீர் ஓட்டம் கிடைக்கப்பெறுவதால் மீன் இனங்களின் வரத்து மற்றும் ஏரியின் வளங்கள் மேம்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பேசிய மீனவ மக்களில் பெரும்பாலோர், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் நிரந்தர நிலைப்படுத்தும் பணியை வரவேற்றனர்.

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, “மீனவ மக்களின் கருத்துகள் முழுமையாக ஒளி மற்றும் ஒலி (வீடியோ மற்றும் ஆடியோ) பதிவு செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும்காலநிலை மாறுபாடு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x