Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வீரசோழபுரம் கோயில் நிலத்தை விற்பனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ஆலய வழிபடு வோர் சங்கம், இந்து முன்னணி, சைவ சமய திருத்தொண்டர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது:
ஆலய வழிபடுவோர் சங்கத் தைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ்:
கோயிலுக்கு அறங்காவலர்கள் இல்லை. அறங்காவலர்கள் இல்லாமல் நிலத்தை விற்பனை செய்யும் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. பொதுநலன் கருதி எனக்கூறி கோயில் நலத்துக்கு விரோதமாக எந்த விற்பனையும் செய்ய முடியாது என உயர் நீதிமன்ற அமர்வு தெளிவான தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, கோயில் நிலத்தின் விற்பனையைக் கைவிட வேண்டும்.
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் மனோகர்:
கோயில் நிலத்தின் மதிப்பு ரூ.200 கோடியாகும். ஆனால், ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம். அறநிலையத் துறையின் பணி என்பது கோயிலை பராமரிப்பது மட்டும் தானே தவிர உரிமையாளராகிவிட முடியாது.
ரங்கத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரங்கராஜன் :
அறங்காவலர் தீர்மானம் கொடுத்து, விளம்பரம் செய்து, ஆட்சேபணைக் கூட்டம் நடத்தி பக்தர்கள், உள்ளூர் மக்கள் கருத்து கேட்டு பின் நிலத்தை விற்பனை செய்ய முடியும். விளம்பரம் கொடுக்கும் முன் அறநிலையத் துறை சட்ட விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஆனால், விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. கோயில் நிலத்தை விற்பனை செய்வதை விட குத்தகைக்கு விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் கோயில் நிலத்தை விற்பனை செய்வதற்கும், கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் அமைக்கவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கூட்ட முடிவில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் பேசும்போது,‘‘ கூட்டத்தில் பேசிய அனைவரின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT