Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM

திருவனந்தபுரத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் குமரி வருகை களியக்காவிளை எல்லையில் பாரம்பரிய வரவேற்பு

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்ற பின்பு குமரி திரும்பிய சுவாமி விக்ரகங்களுக்கு களியக்காவிளை எல்லையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக சென்றிருந்த சுவாமிவிக்ரகங்கள், நேற்று குமரி மாவட்டம் வந்தடைந்தன. பாரம்பரிய முறைப்படி சுவாமி சிலைகளுக்கு களியக்காவிளை எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் இருந்து, 3 சுவாமி விக்ரகங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் சமூகஇடைவெளியுடன், சுவாமி விக்ரகங்கள் பவனி கடந்த 14-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கைஅம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன் ஆகிய சுவாமிகளுக்கு, திருவனந்தபுரம் வரை வழியெங்கும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 16-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை சுவாமி சிலைகள் அடைந்தன. தேவாரக்கட்டு சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் கொலு மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலிலும் நவராத்திரி பூஜையில் கொலு வைக்கப்பட்டன.

நவராத்திரி பூஜைகள் முடிந்த நிலையில், சுவாமி விக்ரகங்கள் மறுபடியும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் சந்திப்பில் வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று இரவில் நெய்யாற்றின்கரையை வந்தடைந்த சுவாமி சிலைகள், மாநில எல்லையான களியக்காவிளையை நேற்று காலை வந்தடைந்தன. அங்கு சுவாமி சிலைகளுக்கு பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படந்தாலுமூடு வழியாக குழித்துறை மகாதேவர் ஆலயத்தை நேற்று மாலை சுவாமி விக்ரகங்கள் அடைந்தன. அங்கு இரவு தங்க வைக்கப்பட்ட சுவாமி சிலைகள், இன்று (30-ம் தேதி) காலை புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை அடைகின்றன. பின்னர், தேவாரகட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம்முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் அந்தந்த கோயில்களுக்கு கொண்டு செல்லப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x