Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் கருத்து களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைய வேண்டும் என திமுகவினர் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை அறிவிக்க வேண்டும்.
இந்த அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது, வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டுக்கு எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமி ழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது இந்த அரசாணை மாணவர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தை போக்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குப்பிடிக்குமா என தெரியவில்லை.
எனவே, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது.
இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்புகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன்: 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுக வலியுறுத்தி வந்தது போல தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்: ஆளுநரிடம் இருந்து எந்த முடிவும் வராததால் மாநில அரசுக்கு உள்ள நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து யார் நீதிமன்றம் சென்றாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும்.
விசிக பொதுச்செயலர் ரவிகுமார் எம்.பி.: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டினை அரசாணை மூலமாகவேவழங்கலாம் என்ற எமது ஆலோசனையை ஏற்று அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT